செவ்வாய், 7 ஜூன், 2011

தற்கொலைக்கு துணிந்த அண்ணா ஹஜாரே...!




அண்ணா ஹஜாரே சந்திப்புக் குறித்து, மேலும் எழுதுங்கள் என்று நண்பர்கள் வட்டத்தில் இருந்து தொடர்ந்து வேண்டுகோள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஏறத்தாழ ஹஜாரே குறித்த எனது முதல் பதிவு வெளியான போது அனைத்து ஊடகங்களிலும் அவர்தான் செய்தியாக இருந்தார். மேலும் என் மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணன் அவர்களும், ஹஜாரே பற்றி விரிவாகவே எழுதி வந்தார். கூடவே, எங்கள் ஆனந்த விகடன் இதழிலும் குறுந்தொடர் வெளியானது. ஆகையால், சற்று பொறுத்திருந்த எழுத நினைத்தேன். அதனால்தான் இந்த இடைவெளி...
அண்ணா ஹஜாரேவை ஊடகம் வாயிலாகவும் அறிந்து கொள்வது என்பது, விரிந்து கிடக்கும் கடலை, பாட்டிலில் அடைத்து பார்ப்பதற்கு சமம். அவருடைய அருகாமையில் அனுதினமும் நடக்கும் நிகழ்வுகள் ஆச்சயர்த்தையே ஏற்படுத்தும். வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு எழுந்து கொள்ளும் ஹஜாரே சிறிது நேரம் வழிப்பாட்டுக்கு செலவிடுகிறார். ராலேக்கண் சித்தி கிராமத்தில் உள்ள யாதவ பாபா கோயிலில் ஒரு சிறிய அறை உள்ளது. இறை சிந்தனை அதிகமாக இருக்கும்போதும், மவுன விரதம் இருக்கும் சமயத்திலும் இங்குதான் தங்குவார். மற்ற நாட்களில் பயிற்சி மையத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் உள்ள தனது அறையில் இருப்பார். நான் அங்கிருந்த நாட்களில் பெரும்பாலும் விருந்தினர் விடுதியில்தான் இருந்தார். எப்படி பார்த்தாலும் காலை 6 மணிக்கு வெளியில் கிளம்பி விடுவார். நானும் அவருடன் ஒட்டிக் கொண்டு சென்றுவிடுவேன். எங்கு, எதற்கு செல்கிறார் என்று தெரியாது. வாகனம் ஒரு நாள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும், மற்றோரு நாள் மரக்கன்று நடப்படும் பகுதிக்கு செல்லும், இன்னோரு நாள் கிணறு வெட்டப்படும் இடத்திற்கு போகும். இப்படி எங்காவது நிர்மானப் பணிகள் நடக்கும் இடத்திற்கே வண்டி செல்லும்.
எனக்கும், அவருக்குமான உரையாடல் குறைவாகவே இருக்கும். இதற்கு இரண்டு காரணம் உண்டு. அவருக்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவராது. எனக்கு இந்தி கொஞ்சம் பஞ்சம். தேவையான போது தகவலை பெற மட்டுமே இந்தியை கருமி போல பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் எந்த விதத்திலும் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்பட்டதில்லை. ஹஜாரே, காலையில் வேலை நடக்கும் இடத்தில் போய் நின்றவுடன், ‘அதை செய், இதை செய்....’ என்ற உத்தரவு கூட போடமாட்டார். அங்கு நடக்கும் பணிகளை கூர்ந்து கவனித்து வருவார். தேவைப்பட்டால் மட்டுமே ஆலோசனை வழங்குவார். சரியாக காலை 8.30 மணிக்கு கார் டிரைவரை அழைத்து, பயிற்சி மையத்தில் உள்ள உணவு விடுதிக்கு காலை உணவுக்கு என்னை அழைத்துச் செல்ல சொல்வார். காலை உணவு நம்மூர் போல வித, விதமாக இருக்கும் என்று நினைத்தால் ஏமாந்துதான் போக வேண்டும்.



அவல் உப்புமா, சமோசா... என்று இதில் ஏதாவது ஒன்றே காலை உணவாக இருக்கும். ஆனால், அதுவே, அங்கு அமுதம் போல இருக்கும். உணவு முடிந்து திரும்பிய உடன் மீண்டும், மதியம் 1 மணிக்கு என்னை சாப்பிட அழைத்துச் செல்ல சொல்வார். மாலை நேரத்தில் உள்ளூர் மக்கள், சமூக சேவகர்கள் அவரைத்தேடி வந்துவிடுவார்கள். உரையாடல் இரவு எட்டு மணி, பத்து மணி வரை கூட நீளும். அதன் பிறகே அன்றைய உணவு அவர் முன்பு வரும். ராலேக்கண் கிராமத்தில் விளைந்த கோதுமை அல்லது சோள ரொட்டியும், கொண்டை கடலை குருமாவும்தான் இருக்கும். நான் அங்கிருந்த நாட்களில் இதுதான் வாடிக்கை. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்த போது, அவரை அறிந்த நண்பர்கள் பதட்டப்பட்டார்கள். பத்து நாட்கள் கூட அவர் தாக்குபிடிப்பார் பயப்பட வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு காரணம் அவரது உணவு பழக்க வழக்கம்தான். ராலேக்கண் சித்தியில் உள்ளவர்கள் மூன்று வேளையும், ரொட்டி உண்பதற்கு காரணம் ஹஜாரேதான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் உருவாக்கிய தடுப்பணைகளும், கால்வாய்களும்தான் இன்று ராலேக்கண் சித்தியை பசுமையாக்கி வைத்திருக்கிறது. இன்று நாடே போற்றும் வகையில் உயர்ந்து நிற்கும் ஹஜாரே, ஒரு காலத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர் என்றால் ஆச்சயர்மாகத்தான் இருக்கும். 1965 ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போது, ராணுவ வாகனத்தில் டிரைவராக ஹஜாரே பணி புரிந்துள்ளார். போர் கடுமையாக இருந்த போது, காஷ்மீர் பகுதியில் உள்ள முகாமுக்கு உணவு ஏற்றிக் கொண்டு செல்கிறார். இவருக்கு முன்னாள் சென்ற வாகனம் கன்னி வெடியில் தாக்கப்படுகிறது. சில அடி தூரத்தில் நடந்த இந்த சம்பவம் ஹஜாரேவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடுத்து, சில நாட்களில்... அவரது நெருங்கிய நண்பர் ஜெயராமன் (தமிழ்நாட்டுக்காரர்) என்ற ராணுவ வீரருடன் பேசிக் கொண்டு இருக்கிறார்.அப்போது எதிரிகள் வீசிய குண்டு விழுந்து, ஜெயராமன் உயிர் இழந்து விடுகிறார். அருகே இருந்த ஹஜாரேவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களும் அவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு சம்பவங்களிலும் ஹஜாரே உயிர் இழக்க அதிக வாய்ப்பு இருந்தன. கண் இமைக்கும் நேரத்தில் பிரிந்து போகும் உயிருக்காக ஏன் வாழ வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. போர் முடிந்த பிறகு நல்ல நாள் பார்த்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுக்கிறார். கடைசியாக டில்லியை சுற்றிப்பார்க்க விரும்பி, டெல்லி ரயில் நிலையம் வருகிறார். அங்கிருந்த கடையில் ஒரு புத்தகம் அவர் கண்ணை கவர்ந்து இழுக்கிறது. உடனே, அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க தொடங்குகிறார். சிறிது நேரத்தில் எல்லாம் அவரது தற்கொலை திட்டம் தவிடு பொடியாகிறது. அவரை சுண்டி இழுத்தது விவேகானந்தரின் சிந்தனைகள் என்ற புத்தகம்தான். ‘‘மனித வாழ்வு என்பதே சக மனிதர்களிடம், அன்பு காட்டுவதும், அவர்களுக்கு உதவி செய்வதும்தான்...’’ என்ற வரிகள் ஹஜாரேவை உலுக்குகிறது. இனி என் வாழ்வு மனித குல சேவைக்கே என்று முடிவு செய்கிறார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற நினைக்கிறார். இன்னும் 4 ஆண்டுகள் பணி செய்தால்தான் ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்கிறார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்கிறார். ஆனால், அந்த 4 ஆண்டுகள் அவருக்கு 40 ஆண்டுகள் போல இருந்திருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தவுடன், திருமணம் செய்வதில்லை என்று உறுதி பூண்டுவிடுகிறார். ஆனால்,ஹஜாரே சும்மா இருந்தாலும் ஹார்மோன் சும்மா இருக்குமா? இராணுவத்தில் விழா நடந்தால் படை வீரர்கள் மனைவியுடன் கலந்து கொள்வது வழக்கம். அப்போது, அழகான பெண்களை பார்த்தவுடன் அவரது மனம், தடுமாறுமாம்.அந்த சமயத்தில் விவேகானந்தர், காந்தி... போன்றவர்களின் சிந்தனையை உள்வாங்கி, அவற்றை கடந்து வந்திருக்கிறார். ஒரு முறை ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை ?என்று கேட்ட போதுதான் இந்த கதையை சொன்னார் ஹஜாரே. தன்னுடைய கதையை சொல்லி முடித்த பிறகு ‘‘என்னுடைய அந்த சூழ்நிலைக்கு திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால், என்னை யாரும் பின்பற்ற வேண்டாம்’’ என்றவர் ‘‘உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?’’ என்றார். இல்லை என்றேன். ‘‘கட்டாயம் திருமணம் செய்து கொள்ளுங்கள். மக்கள் பணி செய்ய வருபவர்கள், அவர்களுக்கு தக்கப்படி வாழ்க்கை துணையை தேடிக் கொள்ள வேண்டும். இதனால், வீணான மன சஞ்சலமும் ஏற்படாது. சேவை உள்ளம் கொண்ட மனைவியால் கூடுதலாக பணி செய்யவும் முடியும்’’ என்று அனுபவ அறிவுரை வழங்கினார் அண்ணா ஹஜாரே.
-இன்னும் சொல்வேன்

1 கருத்து:

ungal nanban சொன்னது…

ஹஜாரேவே திருமணம் தேவை என்பதை கூறிவிட்டார்.எப்போ அண்ணாச்சி உங்க திருமணம்.?? காதல் திருமணமா?நிச்சயிக்கப்பட்டதிருமணமா?.................?????????????? with warm regards... ur friend..!!!