செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நான் சந்தித்த அண்ணா ஹஜாரே-1


இந்திய ஊடகம் மட்டுமல்லாமல், உலக ஊடகங்களும் அண்ணா ஹஜாரேவின் புகழ்பாடுகின்றன. கார்ப்பிரேட் கம்பெனியின் சி.இ.ஓ முதல் கல் உடைக்கும் தொழிலாளி வரை அண்ணா ஹஜாரே பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அடுத்த ஜனாதிபதியாக கூட அவரை தேர்வு செய்தாலும் ஆச்சயர்யப்படுவதற்கில்லை. உலகம் இந்த மா மனிதரை அறிந்து கொள்ள துடிக்கிறது. அந்த எளிய மனிதருடன், அடியேன் உண்டு, உறங்கிய அனுபவத்தை ‘கிராம ராஜீயம்’ என்ற தொடர் கட்டுரையாக பசுமை விகடன் இதழில் எழுதினேன். அந்த காலக்கட்டத்தில் ‘‘யாரோ வடநாட்டுக்காரனை பத்தி பக்கம், பக்கமா எழுதி என்ன பிரயோஜனம்?’’ என்று தமிழ்நாட்டு பிரகஸ்கதபதிகள் என்னை தூற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு அப்போதுதே தெரியும் உலகம் ஒரு நாள் அவரைக்
கண்டுகொள்ளும் என்று.
சரி, முதன் முறையாக அண்ணா ஹஜாரேவை, எங்கு, எப்படி சந்தித்தேன்....
நான்கு ஆண்டுகளுக்கு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘‘மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சமூக சேவகர் அண்ணா ஹஜாரே பற்றிய புத்தகம் ஒன்றை மொழியாக்கம் செய்துள்ளோம். இதை விகடன் பதிப்பகம் வெளியிட வேண்டும். அதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள்’’ எதிர் முணையில் பேசியவர் அப்போதைய காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர். கருணாகரன் கேட்டுக் கொண்டார். உடனே, அப்போது ஆனந்த விகடன் ஆசிரியர் பொறுப்பில் இருந்த கே.அசோகன் அவர்களிடம் இந்த தகவலை தெரிவித்தேன். துணைவேந்தர் கருணாகரன், இதற்கு முன்பு ஐ.ஐடியில் பேராசிரியர், மத்திய பிரதேச பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர்... என்று பல இடங்களில் உயரிய பொறுப்புகளை வகித்தவர். துணைவேந்தர் குறித்தும், அண்ணா ஹஜாரேவை பற்றியும் ஆசிரியரிடம் சுருக்கமாக சொன்னேன். அடுத்த ஒரு வாரத்தில் துணைவேந்தர் கருணாகரன் ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு (அப்போது கிரீம்ஸ் சாலையில் இருந்தது) வருகை தந்தார். துணைவேந்தரை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திவிட்டு வந்துவிட்டேன். அடுத்த சில மாதங்களில் அண்ணா ஹஜாரேவின் ‘எனது கிராமம், எனது மண்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிட்டு இருந்தது. சுற்றுச்சூழல் போராளி ஈரோடு ஜீவானந்தம் தமிழாக்கம் செய்திருந்தார். இந்த புத்தகம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மராத்தி மொழியில் அண்ணா ஹஜாரே எழுதியிருந்தார். இந்த புத்தகம் எழுதுவதற்கு அவர் கன்னியாக்குமரி வந்து ஒரு மாதம் தங்கியிருந்து எழுதியிருக்கிறார். அடுத்து, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகம் அண்ணா ஹஜாரேவிற்கு சிறப்பு டாக்டர் பட்டமும் வழங்கியுள்ளதை தமிழ்நாட்டில் பலருக்கும் தெரியாது. துணைவேந்தர் கருணாகரன், மத்தியபிரதேசத்தில் பணிபுரிந்த போது, அண்ணா ஹஜாரே வடிமைத்துள்ள ராலேக்கண் சித்தி கிராமத்திற்கு சென்று பார்த்துள்ளார். அவரது சமூக தொண்டும், ஊழலுக்கு எதிரான போராட்டமும் கருணாகரன் அவர்களை கவர, அண்ணா ஹஜாரேவின் சிந்தனையை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள தமிழ் மொழியில் பதிப்பிக்க அனுமதி பெற்றுள்ளார். இதையெல்லாம் அந்த புத்தகத்தை மேலோட்டாமாக படித்த பிறகுதான் எனக்கு தெரிந்தது. அடுத்த சில மாதம் கழித்து புதுக்கோட்டையில் இருந்து சர்மா என்பவர் அடிக்கடி பல செய்திகளை எங்கள் அலுவலகத்திற்கு சொல்வார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ராலேக்கண் சித்தி கிராமத்தில் பயிற்சி எடுத்து வந்துள்ளார்கள். அது குறித்த தகவல் அடங்கிய சிறு கையேட்டை அனுப்பிருந்தார். ஏற்கனவே, அண்ணா ஹஜாரே குறித்து நான் அறிந்த தகவல்கள் என்னை ராலேக்கண் சித்தியை நோக்கி செல்ல தூண்டியது. அலுவலகத்தில் விஷயத்தை சொன்னேன். சிறிய செய்தியாக வேண்டாம், தொடர் எழுதும் அளவுக்கு தகவல்கள் வேண்டும். ஆகவே பத்து நாட்கள் கூட அங்கே இருந்துவிட்டு வாருங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தினார் இணையாசிரியர் ச.அறிவழகன். பத்து நாட்களுக்கு மேலாகும் என்பதால் நானே, புகைப்படம் எடுக்க முடிவு செய்து, கேமராவும் எடுத்துச் சென்றேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ராலேக்கண் சித்தியை நோக்கி எனது பயணம் புறப்பட்டது. முதலில் புனே சென்று. அங்கிருந்து சிறுர் என்ற நகருக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்தேன். காலை உணவாக சமோசாவும், சூடான டீயும் குடித்துவிட்டு பஸ் நிலையத்தில் உட்கார்ந்திருதேன். ஒரு மணி நேரத்திற்கு ராலேக்கண் செல்லும் சிவப்பு வண்ண பேருந்து வந்து நின்றது. வண்டியில் என்னையும் சேர்த்து பத்து பேர்தான் இருந்தோம். வறண்ட காற்று முகத்தில் அறைந்தது. அருகில் உட்கார்ந்திருந்த நபர்களை பார்க்கும் போதே தெரிந்தது, அந்த பகுதியில் நிலவி வரும் வறுமை. ஒரு மணி நேரத்தில் சின்ன, சின்ன குக்கிராமத்தை எல்லாம் கடந்து வண்டி ஓடிக் கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் குளிர்ந்த காற்றும் தூரத்தில் பசுமையான வயல்களும் தென்பட்டன. அதுதான் ராலேக்கண் சித்தி என்று எனக்கு தெரிந்துவிட்டது. சுற்று வட்டார கிராமங்கள் வறட்சியில் முழ்கி கிடக்க, ராலேக்கண் சித்தி மட்டும் பசுமையில் கொழித்தது. சுமார் 2000 நபர்கள் வசிக்கும் சின்ன குட்டி கிராமம் அது. கிராமம் என்றால் ஏ.டி.எம், மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, அதி நவீன மருத்துவ மனை, ஹெலிக்காப்டர் இறங்க ஹெலி பேட்... என்று சகல வசதிகளும் உள்ள ஓரே கிராமம் ராலேக்கண் சித்திதான் என்றால் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். தினந்தோறும் புதிய மனிதர்கள் வந்து செல்வதால், கிராம தகவல் மையம் ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அங்கு சென்று நம்முடைய விபரத்தை சொன்னால், உடனே நம்மை அண்ணா ஹஜாரே இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். இது அங்கு வாடிகையான நிகழ்வு. கிராமத்தை ஒட்டி இருந்த ஒரு மலை சரிவில் பள்ளி கூடம் போல சின்ன, சின்ன கட்டிடங்கள் இருந்தன. ஆனால் அது பள்ளி அல்ல என்று பின்பு தெரிந்து கொண்டேன்.
எனது பயண விபரம் எதுவும் அண்ணா ஹஜாரேவுக்கு தெரியாது. நான் அவர் முன்னால் சென்று நின்ற போது, ‘‘எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்றார். என்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். அருகில் இருந்த ஒரு அலுவரை அழைத்து ‘‘இவர் துணைவேந்தர் கருணாகரன்ஜி ஊரில் இருந்து வந்துள்ளார். நம்முடைய அதிதீ (விருந்தினர்) இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று சொன்னவர் ‘‘சாப்பிட்டுவிட்டீர்களா?’’ என்று கேட்டார். பதிலுக்கு காத்திராமல் சாப்பிட அழைத்துச் சென்றார் அண்ணா ஹஜாரே.
அங்கு போன பிறகுதான் தெரிந்தது, எனக்கு முன்பே 50 பேருக்கு மேல் சாப்பிட்டுக்கொண்டிந்தார்கள். தட்டை கையில் எடுத்துக் கொண்டு சென்ற போது, என்னுடைய தோற்றத்தை பார்த்தவுடன் ‘‘மதராஸி ஆவோஜி’’ என்று அன்புடன் அழைத்தார் சமையல்காரர். பெரிய, பெரிய கோதுமை ரொட்டி, நான்கும், சோயா குருமாவையும் ஊற்றினார். சென்னையில் உள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சாப்பிட்டுள்ளேன். ஆனால், அந்த குக்கிராமத்து ரொட்டியை போல ருசியை நான் இதுவரை ருசிக்கவில்லை. ஒரு வேளை தூய அன்புடன் பரிமாறும் போது, அந்த உணவுக்கு கூடுதல் சுவை வந்துவிடும் போல. இரண்டு, மூன்று நாட்களாக பயணத்தில் உணவு சரியாக சாப்பிடவில்லை. அந்த குறையை ஓரே வேளை உணவு போக்கியது. நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது, அண்ணா ஹஜாரே பக்கத்து கிராமத்துக்கு சென்றிருப்பதாக சொன்னார்கள். என்னுடன் சாப்பிட்டவர்கள் எல்லாம் ஒரு அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார்கள். வேறு வேலை இல்லை என்பதால் நானும் அவர்களுடன் ஐயக்கியமானேன். கிராம மக்களிடம் பணியாற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு அலுவலர்கள், ராணுவ வீரர்கள்... என சகலத்துறைச் சார்ந்தவர்களும் தரையில் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு கிராமத்தை எப்படி வளம் நிறைந்த பகுதியாக மாற்றுவது என்று ஒருவர் இந்தி மொழியில் சுவையாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வெளியே வந்து பெயர் பலகையை பார்த்தேன். தேசிய நீர் பிடிப்பு பயிற்சி மையம் என்று எழுத்தப்பட்டிருந்தது. ராலேக்கண் சித்தி கிராமத்தில் பயிர்சி எடுக்கவும், அண்ணா ஹஜாரேவின் பணி பற்றியும் அறிந்து கொள்ள ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு வந்து செல்கிறார்கள் என்ற செய்தி எனக்கு அப்போதுதான் தெரிந்தது.


அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் இருந்த சிறிய குன்றின் மீது ஏறினேன். அடுத்த பத்து நாட்களுக்கும் இந்த அழகிய கிராமத்தில்தான் இருக்க போகிறோம் என்று நினைத்த போது, மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அதற்கு வலுசேர்ப்பது போல மாலை நேர மஞ்சள் நிற வானம் சிறந்த ஓவியம் போல மின்னிக்கொண்டிருந்தது.
-இன்னும் சொல்வேன்

6 கருத்துகள்:

SELVENTHIRAN சொன்னது…

அண்ணே, அருமையா எழுதி இருக்கீங்க!

பெயரில்லா சொன்னது…

sir very good and very proud of u sir..

பெயரில்லா சொன்னது…

innum solveen yendrae?kathu kondirukkereen....
ungal karuthukkal vrumpi magilum ullam.

ilakiya சொன்னது…

superb......

ilakiya சொன்னது…

எப்போது அடுத்த பகுதி வெளிவரும் .வெளியிடவும் மிக விரைவில்
இலக்கியா......

ஊரோடி சொன்னது…

தம்பி அருமையான பதிவு...ஏன் தொடரவில்லை..?
ஊரோடி