வியாழன், 31 டிசம்பர், 2009

காய்க்காத விளாம் பழ மரம்... காய்த்து குலுங்குகிறது!

விவசாயக் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், ஆரம்பத்தில் விவசாயம் என்றால் எனக்கு வேப்பங்காயாக கசக்கும். இதற்கு காரணம், விவசாயம் செய்து பெரிய வருமானம் எதுவும் கிடைக்கவில்லை என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னதை கேட்டததுதான். ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது வகுப்பறையில் இருந்து தப்பிக்க காடு, மலை என்று சுற்றுவதுண்டு. அப்படித்தான் ஒரு முறை ஆத்தூர் கோட்டையை சுற்றிப்பார்க்க திருநாவுக்கரசு என்ற நண்பனுடன் சென்றேன். காலை முதல் கோட்டையை சுற்றி, சுற்றி வந்தோம். முள் மறைவில் சாராயம் விற்பவர்களும், சீட்டு கட்டு விளையாடுபவர்களும்தான் கோட்டை அருகே இருந்தார்கள். அப்போது கோட்டை குறித்த வரலாறு எதுவும் தெரியாது என்பதால், ஏன் இங்கு வந்தோம் என்று சலிப்பு ஏற்பட்டது. சரி, என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு மதிய உணவு சாப்பிட இடம் தேடினோம். ‘‘எங்கள் மாமா தோட்டம் பக்கத்தில்தான் இருக்கிறது அங்கு போய் சாப்பிடலாம்’’ என்று அழைத்தான் திருநாவுக்கரசு. கோட்டையை ஒட்டியிருந்த அந்த தோட்டத்தில் அப்போது யாரும் இல்லை. பப்பாளி, கொய்யா... என்று பழ மரங்கள் இருந்தன. மதிய உணவை அப்படியே வைத்துவிட்டு பப்பாளி, கொய்யா பழங்களை ஒரு கை பார்த்துவிட்டு பம்பு செட்டில் ஒரு குளியல் போட்டுவிட்டு வீடு போய் சேர்ந்தோம்.
அடுத்த வாரமும் எங்கள் பயணம் அந்த தோட்டத்திற்கு செல்ல முடிவானது. ஆனால், இந்த முறை பம்பு செட் ஓடிக் கொண்டு இருந்தது. தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டுயிருந்தார் திருநாவுக்கரசின் மாமா கண்ணன். எங்களை கண்டவுடன் என்ன இந்த பக்கம் என்று விசாரித்தார். ஏதோ சாக்கு, போக்கு சொன்னோம். ‘‘சரி வந்து என்னோடோ தண்ணீ கட்டுங்க’’ என்றார். வயலில் மருந்து செடியான கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்திருந்தார்கள். அந்த காலக் கட்டத்தில் கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்த பலரும் செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள். அந்த மாமாவும் பணக்காரர்தான். ஆக, முறையாக விவசாயம் செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்று முதலில் அங்குதான் தெரிந்து கொண்டேன். இனி, ஊர் சுற்றுவதை விட பயிர்களை பக்கத்தில் இருந்து பார்ப்போம் என்று எங்கள் தோட்டத்திற்கு செல்ல தொடங்கினேன். பல ஆண்டு காலத்திற்கு முன்பு வெளிவந்து கொண்டுயிருந்த ‘மேழிச் செல்வம்’ என்ற விவசாய இதழை வாங்கி படித்தவர் எங்கள் தாதா. கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியவில்லை. ஆகவே, இரண்டு பால் மாடுகளை வளர்த்து வந்தார் தாதா. ஒய்வு கிடைக்கும் போது அவரிடம் விவசாயம் பற்றி விவாதிக்க தொடங்கினேன். அப்போது, எங்கள் தோட்டத்தில் சுமார் நாற்பது வயதுடைய விளா மரம் இருப்பதாகவும், அது இதுவரை ஒரு முறை கூட காய், காய்க்கவில்லை என்று சொன்னார். ஏற்கனவே அந்த மரத்தை பார்த்திருந்தாலும் அதன் வரலாறு தெரியாது. அடுத்த நாள் அந்த மரத்தை சென்று பார்த்தேன். நன்றாக வளர்ந்திருந்தது. ஆனால் மருந்துக்கு கூட காய்கள் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தேன். முருங்கை மரம் காய்க்கவில்லை என்றால் ஆணி அடிப்பதை பார்த்திருக்கிறேன். அது போல் ஏன் இந்த மரத்தில் அடிக்க கூட என்று யோசித்தேன். சுற்றும், முற்றும் பார்த்தேன். மாடுகளின் கால்களில் அடிக்கும், இரும்பு லாடம் கிடந்தது. அதை எடுத்து வந்து நடு மரத்தில் அடித்துவிட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த விளா மரத்தை தினமும் கவனிக்க தொடங்கினேன். என்ன ஆச்சர்யம் அடுத்து வந்த பருவத்தில் விளா மரத்தில் இரண்டு காய்கள் காய்த்திருந்தன. எல்லோருடமும் நான் லாடம் அடித்த கதையை தாதா சொல்லிக் கொண்டு இருந்தார். இரண்டு, மூன்று ஆண்டுகளில் விளாம் பழ மரம் காய்த்து குலுங்கியது. விவசாயத்தில் என் முதல் பரிசோதனை இந்த மரத்தில் இருந்துதான் தொடங்கியது. இப்போது இந்த மரம் ஆண்டுக்கு ஆயிரம் பழம் வரை காய்க்கிறது என்பதுதான் குறிப்பிட வேண்டிய செய்தி. இன்றும் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அடித்த இரும்பு லாடம் அந்த மரத்தில் அப்படியே இருக்கிறது. பின் நாட்களில் இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று ஆராய்ந்த போது, சில மரங்களுக்கு போதுமான சத்து கிடைக்கவில்லை என்றால் காய்க்காது என்று தெரிந்து கொண்டேன். அப்படி என்றால் எங்கள் தோட்டத்தில் இருந்த விளா நாற்பது ஆண்டு காலமாக இரும்பு சத்து இல்லாமல் இருந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

3 கருத்துகள்:

TCTV சொன்னது…

super annachchi !


follower podunga

thalaamaippu poi parunga irukku

eduththu cadjet la serunga

பனித்துளி சங்கர் சொன்னது…

மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !

கபீஷ் சொன்னது…

நல்ல அனுபவப் பகிர்வு.
அடிக்கடி பதிவு போடுமாறு வேண்டுகிறேன்.