இந்த தகவலை நான் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் போராளிகள் முகத்தில் புன்னகை மின்னிக் கொண்டு இருக்கும். காரணம், பதினைந்து ஆண்டு காலமாக மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், சுற்றுச்சூழல் போராளிகள் சொல்வதை மரபணு விதை நிறுவனமும் சரி, விஞ்ஞானிகளும் சரி ஏற்றுக் கொள்வதில்லை. தலையணை அளவு புத்தகத்திலும், இணையதளத்திலும் அடுத்தவனின் அறிவை திருடி டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும் என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டுள்ளது. 1998&ம் ஆண்டு சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மரபணு விதைகளுக்கு எதிரான உண்ணாநிலை போராட்டம் நடந்தது. 17 வயது அரும்பு மீசை பையனாக இருந்த அடியேனும் அதில் கலந்து கொண்டேன்.
இன்று மரம் வளர்ப்பில் பிரபலமாக உள்ள ‘மரம்’ தங்கசாமி உள்ளிட்டவர்கள் பேசினார்கள். அப்போது அந்த இடத்தில் மரபணு விதைகள் ஏன் எதிர்க்கிறோம் என்று என்ன பேசினார்களே அதே விஷயம்தான் நடந்தேறி உள்ளது.
அதாவது, ஆந்திரா, மகாராஷ்டிரா... போன்ற மாநிலங்களில் பருத்தியில் நிறைய காய்ப்புழுத்தாக்குதல் நடக்கிறது. அதை தடுக்க பூச்சி மருந்துகளை தெளித்தாலும், அவற்றுக்கு எதிர்தன்மை பெற்றுவிடுகின்றன. எனவே, எவ்வளவு விஷம் தெளித்தாலும் வயலில் அவை மேய்ந்து கொண்டுதான் இருந்தன. புழுக்களைக் கட்டுப்படுத்த வாங்கிய கடனை அடைக்க விவசாயிக்கு வழி தெரியவில்லை. எனவே, பூச்சி அழிக்க வாங்கிய விஷத்தை வைத்தே விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இதனால் அந்த காலக்கட்டத்தில் பருத்தி பயிர் செய்ய விவசாயிகள் அச்சம் கொண்டார்கள். இந்த சமயத்தில்தான் மரபணு மாற்று செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தினால் அவற்றில் உள்ள விஷம் காய்ப்புழுக்களை கட்டுப்படுத்திவிடும். இதனால், பூச்சி மருந்து தெளிக்க வேண்டிய நிலை ஏற்படாது . நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை காட்டினார்கள். ‘‘பூச்சிக்கொல்லி மருந்துக்கு எப்படி எதிர்ப்புதன்மை கொண்டதாக காய்ப்புழுக்கள் உருவாகி விட்டதோ, அதே போன்று மரபணு மாற்று விதையில் உள்ள விஷத்திற்கு எதிராகவும் காய்ப்புழுக்கள் எதிர்ப்பு தன்மை பெற்றுவிடும். எனவே மரபணு மாற்று விதைகள் வேண்டாம்’’ என்று சேலத்தில் நடந்த உண்ணாநிலை போராட்டத்தின் விவசாயிகளாலும்,தொண்டுநிறுவனத்தைச்சார்ந்தவர்களாலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘இது விஞ்ஞானம் தெரியாதவர்களின் பிற்போக்கு பேச்சு... ’’ என்று அன்று நக்கல் அடித்தார்கள். ஆனால், இன்று இந்தியாவில் அதிகளவு மரபணு மாற்று பருத்தி பயிரிடப்பட்ட குஜராத்தில் ஒரு செய்தி வருகிறது.
மரபணு மாற்று பருத்தி வயலில் காய்ப்புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. இளம் சிவப்பு காய்ப்புழுக்கள் மரபணு மாற்று விஷத்திற்கு எதிராக எதிர்ப்பு தன்மை பெற்று விட்டன என்று. மீண்டும், மீண்டும் பட்டறிவே உயர்ந்து நிற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக