
இதற்கு காரணம், தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பே மேழிச்செல்வம் என்ற விவசாய இதழுக்கு சந்தா கட்டி படித்தவர். ‘‘திருச்சியில் நம்மாழ்வார் அண்ணாச்சினு ஒருத்தர் இருக்காரு. அவர்தான் எங்களுக்கு குரு மாதிரி. அவரு விவசாயிகளுக்கு கிட்ட கத்துக்கிட்ட தொழில்நுட்பத்தை இந்த புத்தகத்திலு எழுதியிருக்காரு’’ என்று தாத்தாவிடம் கொடுத்தார். இந்த சம்பவம் 1997&ம் ஆண்டு வாக்கில் நடந்தது. நம்மாழ்வார் என்ற பெயரை அப்போதுதான் முதல் முறையாக காதில் கேட்டேன். இவர்தான் என் வாழ்க்கையை புரட்டிப் போட போகிறார் என்று அப்போது தெரியாது.
திருச்சியில் இருந்து லீசாநெட்வோர்க் மூலம் வெளிந்த ‘பசுந்தளிர்’ என்ற அந்த இதழை படிக்கும் போது சில தகவல்கள் ஆச்சர்யமாக இருந்தது. இருந்த போதும், அதில் இருந்த விஷயங்கள் எனக்கு அப்போது பிடிபடவில்லை. பிறகு ஒரு நாள் ‘‘யாரு தாத்தா இந்த ஆளு?’’ என்று கேட்டேன். ஆத்தூரில் செங்கிஸ்கான் என்பவர் ‘அவார்டு’ தொண்டுநிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் எங்கள் குடும்ப நண்பர். தொண்டுநிறுவனம் மூலம் இயற்கை விவசாயத்தை பரப்பும் பணியை செய்து வந்தார். அவரது ஊழியர்தான் இந்த நபர், பெயர் செல்லமுத்து. இவர்தான் இந்த பகுதியில் இயற்கை விவசாய களப்பணியாளர் என்று தெரிந்து கொண்டேன். நூலகம் சென்ற நேரம் போக தோட்டத்தில்தான் இருப்பேன். அந்த நேரங்களில் செல்லமுத்து அண்ணன் அங்கு வருவது உண்டு. ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் குறித்து கடுமையான எதிர்ப்புகளை காட்ட வைத்தது என் புத்தக அறிவு. ஆனால், தாத்தா ஒரு காலத்தில் எந்த உரமும் போடாமல்தான் விவசாயம் செய்து வந்த அனுபவத்தை சொன்ன போது, கொஞ்சம், கொஞ்சமாக அது குறித்து தெரிந்து கொள்ள தொடங்கினேன். ஒற்றை வைக்கோல் புரட்சி செய்த மசானோ ஃபுக்கோவோகா, கியூபா இயற்கை விவசாயம், பசுமை புரட்சியின் வன்முறைகள்... என்று தேடித்தேடிப் படித்தேன். ஒருக்கட்டத்தில் படித்தை எல்லாம் வயலில் செய்துபார்க்கவும் தொடங்கினேன். இப்படி இயற்கை விவசாயம் செய்து வந்த போது, திருச்சி லீசாநெட்வோர்க் மூலம் இயற்கை விவசாயம் குறித்த பாடம் நடத்துவதை அறிந்து படித்து வந்தேன். அது 1998 ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ‘‘தருமபுரியில் நடக்கும் விழாவுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் அண்ணாச்சி வருகிறார்’’ என்று செல்லமுத்து அண்ணன் சொன்னார்.
துள்ளிக் குதித்தேன். அவரை காண்பதற்காக ஆயிரம் கேள்விகளுடன் சென்றேன். ஆனால், அந்த விழாவில் அவர் பேசியதை கேட்டவுடன் அவை அனைத்தும் காணமல் போயின. அவரது எளிமையும், பழகும் தன்மையும், மனிதநேயமும்... எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அங்கு நடந்த காட்சியை பார்த்தவுடன், எனக்கு சாக்ரடீஸ் குறித்து பிளாட்டோ எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வந்தது. ‘‘அவரை நாங்கள் எல்லாம் குருவாக மதித்து பழகினோம். அவரோ எங்களை சக நண்பர்களாக நடத்தினார்.’’