சனி, 4 டிசம்பர், 2010
ஓஷோவும், வீராசாமி வாத்தியாரும்!
ரஜனீஷ் ... இந்த பெயரை நான் கேட்ட போது, எனக்கு 12 வயது. 1990&ம் ஆண்டு ஆத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் 7&ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். எனது வகுப்பில் ரஜனீஷ் என்ற பையன் ஒருவன் படித்தான். ஒவ்வோரு நாளும் வருகை பதிவு எடுக்கும் போதும், வீராசாமி வாத்தியார் ‘டேய் ரஜனீஷ் ... ரஜனீஷ் சாமியார் ஆசிரமத்துக்கு போறீயா?’’ என்று கேட்பார். இது எப்போதாவது சொன்னால் கூட பரவாயில்லை. தினமும் இதே சாமியார் புரணத்தை பாடியதால் ‘‘எவன்டா அது ரஜனீஷ்?’’ என்று எனக்குள் கேள்வி எழும். பிற்காலத்தில் எங்கள் வாத்தியார் வீராசாமியை நினைக்கும் போது, இப்போதும் எனக்கு ஆச்சர்யமாகதான் இருக்கிறது. வழக்கமாக மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறைக்குத்தான் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்துவார்கள். ஆனால், வீராசாமி வாத்தியார் மட்டும், அவர் வகுப்பு நேரம் வரும் போது எல்லாம் அவர் ஓய்வு எடுக்கும் ஆசிரியர் அறைக்கு வெளியே, உட்கார வைத்து பாடம் நடத்துவார். அதுவும் எப்போதாவதுதான். மற்ற நேரங்களில் எல்லாம், ‘‘இங்கேயே உட்கார்ந்து எதையாவது செய்ங்கடா...’’ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அடுத்து, அவர் வகுப்பு எடுத்த அறிவியல், ஆங்கிலம் பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுப்போம். காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளை வாத்தியார் திருத்திவிடுவார். ஆனால், மதிப்பெண் மட்டும் போட மாட்டார். விடைத்தாளை எங்களிடம் கொடுத்து, ‘‘நீயே கூட்டி மதிப்பெண் சொல், உங்கள் விடைத்தாளை திருத்துவதுதான் என் வேலை. கூட, குறைச்சலாக மதிப்பெண் போட்டு உங்கள் மனசை உடைத்து விடக்கூடாது’’ என்று ஒவ்வோருவரிடமும் கொடுத்துவிடுவார். நாங்கள் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், வியப்பாக இருக்கும். நிறைய மதிப்பெண் வழங்கியிருப்பார். அதை கூட்டி அவரிடம் சொல்வோம். நாங்கள் சொல்லும் மதிப்பெண்ணை போட்டு, கையெழுத்து இட்டுவிடுவார். இப்படி ஒரு புரட்சியான ஆசிரியர் ஆத்தூர் பள்ளியில் இருந்தார், அவரிடம்தான் நான் பாடம் படித்தேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
வீராசாமி வாத்தியார் மாணவர்கள் விடுமுறை எடுத்தாலும், கண்டித்ததில்லை. அவரிடம் படிக்கும் போது, எனக்கு ‘டைபாய்டு’ காய்ச்சல் வந்துவிட்டது. ‘‘ஒரு மாதம் வரை தாராளமாக விடுமுறை எடுத்துக் கொள். உடம்பு சரியான பிறகு வந்தால் போதும்’’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இப்படி எல்லாம் வீராசாமி வாத்தியார் நடந்து கொள்ள, ஓஷோ என்ற மனிதர் அவருக்குள் ஏற்படுத்திய மாற்றம்தான் என்று பிற்பாடுதான் புரிந்து கொண்டேன். பள்ளி கல்வி முடிந்து, உலக கல்வி கற்க ஊர், ஊராக சுற்றிவிட்டு 1999&ம் ஆண்டு 19 வயதில் தருமமிகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.
சென்னையில் எனக்கு யாரையும் தெரியாது. எனவே, அண்ணாசலையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் புத்தகங்கள் படிப்பதிலேயே நேரத்தை கழித்தேன். மாலை நேரத்தில் ஒவ்வோரு மேசையிலும் பலரும் படித்துவிட்டு வைத்த புத்தகங்கள் அப்படியே கிடக்கும். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. நூலகம் அடைப்பதற்குள் எல்லா மேசையிலும் என்ன புத்தகங்கள் உள்ளன என்று பார்ப்பேன்.
அப்படித்தான் ஒரு நாள் பல புத்தகங்களுக்கு மத்தியில் ‘எதிர்ப்பிலேயே வாழுங்கள்’ என்ற புத்தகம் இருந்தது. தலைப்பு புதுமையாக இருக்கிறது என்று, உள்ளே புரட்டினேன். ‘ரஜனீஷ் என்ற ஓஷோ பிறக்கவும் இல்லை; இறக்கும் இல்லை; பூமிக்கு வந்த நாள் டிசம்பர் 11, 1931 . சென்ற நாள்19 ஜனவரி 1990’என்று இருந்தது. அட! சரியான டுப்பாகூர் பார்ட்டி, என்று நான் நினைத்த போது, ரஜினீஷ், இப்போது ஓஷோ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சாமியார் நீ தானா என்று பஞ்சு போன்ற தாடியுடன் இருந்த ஓஷோவை பார்த்துக் கொண்டிருந்த போதே, நூலகம் அடைப்பதற்கான ஒலி எழும்பியது. அந்த புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு ஆண்டுகள் பல ஓடி, ஞானத் தேடலில் இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருந்த போது, ஆன்மீக நண்பர்கள் ஓஷோ பெயரை சொன்னால் எனக்கு சிரிப்பாக வரும். அவர் ஒரு ஏமாற்று பேர்வழி, புத்தர் தொடங்கி போப்பாண்டவர்... வரை எல்லோரையும் திட்டி வைத்துள்ளார். அவர் மட்டும் யோக்கியமா? என்று ஒருமையில் கூட விமர்சனம் செய்திருக்கிறேன். மயிலாடுதுறை வாழ் நண்பர்களுடன் அங்கு இரண்டு ஆண்டுகள், அஷ்ட சித்தி யோகம் கற்ற காலங்களில் ஓஷோ பெயரை கேட்டாலே, அவரை காரசாரமாக விமர்சனம் செய்ய தொடங்குவேன்.
ஒரு முறை ஓசூரில் இருந்த சக யோக சாதகர் சசிக்குமாரை சந்திக்க சென்றுயிருந்தேன். அப்போது, நானும் சசிக்குமாரும் மாலை நேரத்தில் ஓசூர் நகரத்தை ஒட்டியுள்ள மலையின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு உலக தத்துவம் குறித்து விவாதம் செய்துக் கொண்டுயிருந்தோம். ஒரு கட்டத்தில் ஓஷோ பக்கம் எங்கள் பேச்சு திரும்பியது. வழக்கம் போல ஓஷோவை சூடான வார்த்தகளால் அர்ச்சனை செய்யத் தொடங்கினேன். சசியோ,‘‘ அண்ணாச்சி! நீங்கள் ஓஷோ வை விமர்சனம் செய்வதை பார்த்தால், அவருடைய தத்துவத்தை நிறைய படித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. ஆனால் அதிகமாக அவரை விமர்சிக்க வேண்டாம்’’என்று சொன்னார்.
‘‘அட! நீங்கள் வேற, அந்த தாடியை கண்டு ஏன் பயப்படுகிறீகள்’’ என்று வழக்கம் போல சத்தமாக சிரித்தபடியே சொன்னேன்.
ஆனால்? நடந்து வேறு...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
ஏன் சார் இந்த கோபம்... இப்ப ஓஷோவ புடிக்குமுள்ள சார்...
கருத்துரையிடுக